58 இளநிலை உதவியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு
பள்ளிக்கல்வி துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 58 இளநிலை உதவியாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.;
சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப்-4 போட்டித்தேர்வின் வாயிலாக இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 673 பேரில் கலந்தாய்வின் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தினை தேர்வு செய்த 58 இளநிலை உதவியாளர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் நேற்று நடைபெற்றது.
முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் சங்கரநாராயணன், கார்த்திக்கேயன், இருக்கைப்பணி கண்காணிப்பாளர் சீனிவாசன், உதவியாளர் ராமதுரை, இளநிலை உதவியாளர் பிரசன்னகார்த்திக் ஆகியோரை கொண்ட குழுவினர் இளநிலை உதவியாளர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பு செய்தனர்.
பணியேற்பு
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா கலந்துகொண்டு பேசுகையில், வளரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப கணினியினை நன்கு தெரிந்துகொண்டு பணியில் கால தாமதத்தினை தவிர்த்து தங்களது பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) ராஜூ, பள்ளி துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட இளநிலை உதவியாளர்கள் கல்வித்துறை அலுவலகங்கள், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியேற்றனர்.