550 லிட்டர் சாராயம்- 336 மதுபாட்டில்கள் பறிமுதல்

காரில் கடத்தி வரப்பட்ட 550 லிட்டர் சாராயம்- 336 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் கைது செய்யபபட்டார்

Update: 2022-10-06 18:45 GMT

மயிலாடுதுறையில் காரில் கடத்தி வரப்பட்ட 550 லிட்டர் சாராயம் மற்றும் 336 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

வாகன தணிக்கை

காரைக்கால் மாவட்டத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காரில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் பாகசாலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 7 அட்டை பெட்டிகளில் 336 மதுபாட்டில்கள் மற்றும் 550 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது.

கைது, பறிமுதல்

இதையடுத்து மதுவிலக்கு போலீசார் காரையும், கடத்தப்பட்ட சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த சீர்காழி தாலுகா வழுதலைக்குடி கீழத்தெருவை சேர்ந்த பாலு மகன் வீரமணி (வயது24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் காரைக்காலில் இருந்து சீர்காழி தாலுகா பழையார் மீனவ கிராமத்திற்கு சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்