மது விற்ற 54 பேர் கைது
தேனி மாவட்டம் முழுவதும் மது விற்ற 54 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் ரோந்து
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி அனைத்து மதுக்கடைகள், மதுபான பார்களை மூட கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரித்தார்.
ஆனால், மாவட்டத்தில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் பலர் ஈடுபட்டனர். டாஸ்மாக் மதுக்கடைகளில் மொத்தமாக வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்தனர். இதை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
54 பேர் கைது
தேனி சந்தை மாரியம்மன் கோவில் தெருவில் மதுவிற்ற அல்லிநகரம் அம்பேத்கர் வடக்கு தெருவை சேர்ந்த சூர்யா (வயது24) என்பவரை தேனி போலீசார் கைது செய்தனர். தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மதுவிற்ற தேனி ஓடைத்தெருவை சேர்ந்த சின்னராஜ் (67) என்பவரை தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மதுபானம் விற்பனை செய்த 54 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 468 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.