பிளையிங் பயிற்றுவிப்பாளர்களாக தகுதி பெற்ற 53 அதிகாரிகள் தாம்பரம் விமானப்படை தளத்தில் கவுரவிப்பு
தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் உள்ள பிளையிங் பயிற்றுனர்கள் பள்ளியில் (எப்.ஐ.எஸ்.) 153-வது தகுதி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.;
பயிற்சி பள்ளியின் தளபதி ஏர் மார்ஷல் மானவேந்திர சிங் தலைமை தாங்கினார். கேப்டன் ரதீஷ்குமார் வரவேற்று பேசினார். இந்திய விமானப்படையைச் சேர்ந்த 41 பேர், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 2 பேர், இந்திய கடற்படையைச் சேர்ந்த 6 பேர், இந்திய கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் நட்பு நாடுகளின் ஆயுதப்படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் (மியான்மர் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தலா ஒருவர்) உட்பட மொத்தம் 53 அதிகாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில், பயிற்சியின்போது ஒட்டுமொத்த ஆர்டர் ஆப் மெரிட்டில் முதலிடம் பிடித்த லெப்டினன்ட் கமாண்டர் அக் ஷய்க்கு மதிப்புமிக்க மஜிதியா டிராபி சுழற்கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த விமானப் பணியாளர்களுக்கான கோப்பையையும் அவரே தட்டி சென்றார். சிறந்த விமானப் பணியாளர்களுக்கான மற்றொரு கோப்பை ஸ்க்வாட்ரான் லீடர் ஏபி சிங்குக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, கொமடோர் கமாண்டன்ட் டிராபி ஸ்குவாட்ரான் லீடர் டி.டிரெஹான் பெற்றார். அவரே, பயிற்றுவிக்கும் நுட்பத்தில் முதலிடம் பெற்றார். தரைப்படைப் பாடங்களில் முதலிடம் பிடித்ததற்காக விமான அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் அக் ஷித் கவுசலுக்கு கேடயம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த ஆர்டர் ஆப் மெரிட்டில் 2-வது இடத்தைப் பிடித்ததற்காக விமான அதிகாரி டி.ஆர். நவீன் ஹரி கேடயம் பெற்றார்.