அதிக கட்டணம் வசூலித்த 52 ஆம்னி பஸ்கள் சிக்கின

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி கோவையில் அதிக கட்டணம் வசூலித்த 52 பஸ்கள் சிக்கின. ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-10-01 18:45 GMT

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி கோவையில் அதிக கட்டணம் வசூலித்த 52 பஸ்கள் சிக்கின. ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர் விடுமுறை

காந்தி ஜெயந்தி தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளாகும். நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 5-ந் தேதி களில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படு கிறது.

இடையில் 3-ந் தேதி (நாளை) மட்டும் வேலை நாளாக உள்ளது. அன்று ஒருநாள் விடுப்பு எடுத்தால் ஆயுத பூஜையை யொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

இதற்கிடையே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து 1-ந் தேதி முதல் வருகிற 10-ந் தேதி வரை விடு முறை விடப்பட்டு உள்ளது. இது போல் கல்லூரிகளுக்கும் விடு முறை அளிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கோவையில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல நேற்று முன்தினம் முதல் பஸ், ரெயில்நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.

52 ஆம்னி பஸ்கள் சிக்கின

இந்தநிலையில் ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி கோவையில் ஆம்னி பஸ்களில் வழக்கத்துக்கு மாறாக அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், முறையாக வரிசெலுத்தாமல் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

இது குறித்து சென்னை வட்டார போக்குவரத்து ஆணையாளர், கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையா ளர் எஸ்.கே.எம்.சிவகுமரன் ஆகியோரின் உத்தரவின்பேரில் கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கொண்ட 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

அவர்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆம்னி பஸ்களில் அதிரடி சோதனை செய்தனர். மொத்தம் 166 ஆம்னி பஸ்களில் தணிக்கை நடைபெற்றது. இதில் 52 ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்ததும், முறையாக சாலை வரிசெலுத்தாமலும் இயக்கப்பட்டதும் தெரியவந்தது. உடனே அந்த ஆம்னி பஸ்களின் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ரூ.1¼ லட்சம் அபராதம்

2 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரூ.75 ஆயிரம் சாலை வரியாக வசூலிக்கப்பட்டது. இதுதவிர ரூ.32 ஆயிரம் அபராத தொகை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை மண்டல வட்டார போக்குவரத்து இணை ஆணையாளர் எஸ்.கே.எம்.சிவகுமரன் கூறுகையில், பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மற்றும் சாலை வரி செலுத்தாத ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்