500 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்

Update: 2023-04-11 19:30 GMT

சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.

சிகிச்சை மையம்

சேலம் உருக்காலை வளாகத்தில் 500 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நேற்று கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் இதுகுறித்து கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி கொரோனா பாதுகாப்பு ஒத்திகை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் நடைபெற்றது. அப்போது ஆக்சிஜன் படுக்கை வசதிகள், சேமிப்பு கட்டமைப்பு, மருத்துவ பணியாளர்கள், கொரோனா சிகிச்சைக்கு தேவையான வசதிகள், மருந்து மாத்திரைகள் கையிருப்பு, முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள், அவசர ஊர்தி வாகனங்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் தேவையான அளவு உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தயார் நிலையில் உள்ளது

சேலம் உருக்காலை வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் 30 ஆயிரம் சதுர அடியில் ரூ.4 கோடி செலவில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. இந்த சிறப்பு சிகிச்சை மையம் பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்களில் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் இருந்தால் அதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் (ஆத்தூர்) ஜெமினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்