ஊட்டியில் 50 ஆயிரம் பேர் படகு சவாரி
பொங்கல் விடுமுறையான 4 நாட்களில் ஊட்டி படகு இல்லத்தில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.;
ஊட்டி,
பொங்கல் விடுமுறையான 4 நாட்களில் ஊட்டி படகு இல்லத்தில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
பொங்கல் விடுமுறை
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இதில் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறையை ஊட்டியில் கழிக்க கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து சுற்றுலா பணிகள் குவிந்தனர். அவர்கள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் குன்னூர் சிம்ஸ் பூங்கா, பைன்பாரஸ்ட், காட்டேரி பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது.
50 ஆயிரம் பேர் வருகை
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்படும் ஊட்டி படகு இல்லத்திற்கு கடந்த 4 நாட்களில் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்குள்ள மோட்டார் படகுகள், துடுப்பு படகுகள், மிதி படகுகளில் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். அப்போது செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படகு சவாரியின் போது, சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த மரங்களையும், மான் பூங்காவில் உள்ள கடாமான்களையும், ஏரி கரையோரம் மரங்களில் அமர்ந்திருந்து ஓய்வு எடுக்கும் புள்ளி மூக்கு வாத்துகளையும் கண்டு ரசித்தனர். இதேபோல் ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திற்கு புதுமண தம்பதிகள் வருகை தந்தனர். தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், நேற்று படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பொங்கல் விடுமுறையில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 55 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து உள்ளனர்.