கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் 50 பவுன் கொள்ளை
தேவகோட்டையில் பட்டப்பகலில் கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் 50 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..;
தேவகோட்டை,
தேவகோட்டையில் பட்டப்பகலில் கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் 50 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..
கதவு உடைப்பு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கல்வி மாவட்ட ஆசிரியர் மற்றும் நகராட்சி பணியாளர், ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலாளராக இருப்பவர் மகாலிங்கம் (வயது 42). இவருடைய மனைவி ஸ்ரீதேவி. இவர் தேவகோட்டை அருகே வெங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீடு ஆவரங்காடு சரசுவதி வாசக சாலையில் உள்ளது. இருவரும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மகாலிங்கம் மதியம் சாப்பிடுவதற்காக 2 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பின்புறம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
50 பவுன் நகைகள் கொள்ளை
பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் பட்டபகலில் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து மகாலிங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார், நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
சிவகங்கையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அங்கு பதிவாக இருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.