நூற்பாலைகளில் 50 சதவீதம் உற்பத்தி நிறுத்தம்

நூற்பாலைகளில் 50 சதவீதம் உற்பத்தி நிறுத்தம்

Update: 2023-05-22 18:45 GMT

கோவை

நூல்விலை சரிவு, உற்பத்தி செலவு அதிகரிப்பு எதிரொலியால் நூற்பாலைகளில் 50 சதவீதம் உற்பத்தியை இன்று முதல் நிறுத்துவதாக நூற்பாலை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

1500 நூற்பாலைகள்

நாடு முழுவதும் இயங்குகின்ற நூற்பாலைகளில், 50 சதவீதம் நூற்பாலைகள் தமிழ்நாட்டில் தான் இயங்குகின்றன. இங்கு பருத்தியில் இருந்து நூல் தயாரிக்கும் நூற்பாலைகள், கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், மறுசுழற்சி மில்கள் என 1500-க்கும் மேற்பட்ட மில்கள் இயங்கி வருகின்றன. இந்த நூற்பாலைகள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 15 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெருகின்றனர்.

இந்த நிலையில் ஜவுளித்தொழிலில் ஏற்பட்டிருக்கும் கடுமையான நெருக்கடியால் லட்சக்கணக்கான குடும்பங்கள் மற்றும் ஜவுளி நூற்பாலைகளின் எதிர்காலம் என்னவாகும்? என கேள்வி எழுகிறது.

இதுகுறித்து மேலும் நூற்பாலைகள் கூட்டமைப்பை சேர்ந்த ஜெகதீசன், சுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:-

நூல் விலை சரிவு

வெளிநாட்டு நூல் இறக்குமதியால் நூற்பாலைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் நூல்களை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை நஷ்டத்திற்கு விற்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

ஆண்டுக்கு 365 நாட்களும் 3 ஷிப்ட் என்ற அடிப்படையில் இயங்கி வந்த நூற்பாலைகள் தற்போது 50 சதவீதத்திற்கும் குறைவான வேலை வாய்ப்பினை தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வங்காளதேசம், வியட்நாம், சீனா போன்ற போட்டி நாடுகளுக்கு நூல்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே அவர்கள் உற்பத்தி செய்து அங்குள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு வர்த்தகம் செய்து வருகின்றனர். மேலும் வங்காள தேசத்தில் இருந்து சீனா, வியட்நாம் நூல்கள் வங்காள தேச நாட்டு லேபிளில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் உள்நாட்டு நூல் உற்பத்தி போதுமான வர்த்தகம் இன்றி தவிக்கின்றது. இதன் காரணமாக வேறு வழியின்றி உற்பத்தி செய்யப்படுகின்ற நூல்களை நஷ்டத்தில் விற்கிறோம்.

வட்டி பாதிப்பு

கடந்த கொரோனா பேரிடரின்போது நெருக்கடியில் இருந்த தொழில் முனைவோருக்கு மத்திய அரசாங்கத்தின் உத்தரவினால், வங்கிகள் தந்த கடன்களை தற்போது வட்டியுடன் செலுத்தி வருகிறோம். இந்த கடனை திருப்பி செலுத்த மேலும் 6 மாதத்திற்கு அவகாசம் அளிக்க வேண்டும்.

நூற்பாலைகளுக்கான கடன் வட்டி சதவிகிதம் 7-ல் இருந்து 11 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில், கடனுக்கான வட்டி உயர்வு மேலும் ஒரு சுமையாக மாறியுள்ளது. எனவே கடன் வட்டி சதவீதத்தை 7 ஆக குறைக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும் மின் கட்டண உயர்வு காரணமாக நூல்களுக்கான உற்பத்தி செலவு ரூ.7 வரை அதிரித்துள்ளது. எனவே மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் நூற்பாலைகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தொழிலை மீட்க வேண்டும்.

50 சதவீதம் உற்பத்தி நிறுத்தம்

இந்த நிலையில் நஷ்டத்தில் இயங்குகின்ற அனைத்து நூற்பாலைகள் 50 சதவீதம் உற்பத்தியை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் குறைக்க முடிவெடுத்துள்ளோம். இதனால் நாள்தோறும் ரூ.80 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும். எனவே நூற்பாலைகளை காக்க உடனடியாக மத்திய, மாநில அரசாங்கங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது கூட்டமைப்பு நிர்வாகி அருண்மொழி உடன் இருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்