உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் குறைந்தபட்ச கூடுதல் ஆதார விலை
அனைத்து விளை பொருள்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் குறைந்தபட்ச கூடுதல் ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது.
அனைத்து விளை பொருள்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் குறைந்தபட்ச கூடுதல் ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது.
ஆதார விலை
இதுகுறித்து சங்க நிறுவன தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது:- மத்திய அரசு சாமிநாதன் ஆணையம் பரிந்துரைப்படி விவசாயிகளின் அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் குறைந்த பட்ச கூடுதல் ஆதார விலை நிர்ணயம் செய்து சட்டமாகவும் இயற்ற வேண்டும்.
மாநில அரசு நெல்லுக்கு குவிண்டால் ரூ.3 ஆயிரம், கரும்பு டன் ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கிற்கு டன் ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டால் ரூ. 15 ஆயிரம், மக்காச்சோளம் குவிண்டால் ரூ. 3 ஆயிரம், மாட்டுப்பால் லிட்டருக்கு ரூ.50, எருமைப்பால் லிட்டர் ரூ. 75 வழங்க வேண்டும். மாநில அரசு தென்னை, பனையில் இருந்து கள் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
கடன் தள்ளுபடி
ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை சீரமைக்க வேண்டும்.
விளைநிலங்களை தொழில் திட்டங்களுக்கு கையகப்படுத்தக் கூடாது. வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்ச்சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் உயிரிழக்கும் விவசாயிகள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
போராட்டம்
உழவு மானியம் ரூ.10ஆயிரம் வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் ஜூலை 5 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அமரேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.