யூ-டியூப்பில் பதிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 5 வாலிபர்கள் சிக்கினர்- கேமரா, செல்போன்கள் பறிமுதல்
யூ-டியூப்பில் பதிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து கேமரா, செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
யூ-டியூப்பில் பதிவிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து கேமரா, செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மோட்டார் சைக்கிள் சாகசம்
மதுரையில் கல்லூரியில் படிக்கும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசங்களை வீடியோ எடுத்து அதனை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர். இதற்காக ஒரு சில இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு வேகமாக வண்டியில் செல்வது, வீலிங் செய்வது போன்றவற்றை செல்போன், கேமரா மூலம் பதிவு செய்து அதனை இணையதளத்தில் பரப்பும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் செல்லும்போது ஒரு சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் அவர்கள் சாகசங்கள் செய்யும்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதை கண்டு அச்சத்துடன் செல்ல நேரிடுகிறது. எனவே இவ்வாறு சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
வாலிபர்கள் 5 பேர் கைது
அதன்பேரில் வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்று இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தல்லாகுளம் போலீஸ் நிலையம் அருகே உள்ள வல்லபாய் படேல் ரோடு பகுதியில் வாலிபர்கள் சிலர் இதுபோன்ற சாகசத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது.
போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் கோரிப்பாளையம், முகமதியர் தெருவை சேர்ந்த சேக் முகமது(வயது 21), நல்லசிவம் (22), சாஜன் (21), பொதும்பு சோனைகோவில் தெருவை சேர்ந்த பிரதீஸ் (22), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மதன்குமார்(21) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் யூ-டியூப் சேனல்கள் நடத்தி அதில் இந்த மாதிரியான வீடியோக்களை பதிவிடுவதற்காக ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்தது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கேமரா மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.