ஈரோடு மாவட்டத்தில் 5 காப்புக் காடுகள் சரணாலயமாக அறிவிப்பு- அரசாணை வெளியீடு

வன உயிரினங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கு காப்புக் காடுகள் வன உயிரின சரணாலயமாக நிர்வகிக்கப்பட வேண்டும்.

Update: 2024-02-01 10:17 GMT

சென்னை:

தமிழ்நாடு வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள வடபர்கூர், தெற்கு பர்கூர், தாமரைக்கரை, எண்ணமங்கலம், நகலூர் ஆகிய காப்புக்காடுகள், சூழலியல், தாவரங்கள் மற்றும் வனவிலங்குகள் வாழ்விடத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

இந்த வன உயிரினங்களின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், மனிதனுக்கும், வன உயிரினங்களுக்கும் இடையேயான மோதல்களைத் தணிக்கவும் இப்பகுதி வன உயிரின சரணாலயமாக நிர்வகிக்கப்பட வேண்டும்.

அந்த பகுதிகளில் 70 வகையான பட்டாம்பூச்சிகள், 35 வகையான மீன்கள், 10 வகையான இருவாழ்விகள், 25 வகையான ஊர்வன உயிரினங்கள், 233 வகையான பறவைகள், 48 வகையான பாலூட்டிகள் வாழ்கின்றன. மதிப்புமிக்க சந்தன மரங்கள் அதிகம் உள்ளன.

எனவே அந்தியூர் வட்டத்தில் உள்ள காப்புக்காடுகளை, சூழலியல் மற்றும் இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக கருதியும், அங்குள்ள வன உயிரினங்கள் மற்றும் அதன் சூழலை பாதுகாக்கும் நோக்கத்திற்காக வடபர்கூர், தெற்கு பர்கூர், தாமரைக்கரை, எண்ணமங்கலம், நகலூர் ஆகிய காப்புக்காட்டு பகுதிகளை (சாலைகள், பாதைகள், குடியிருப்பு பகுதிகளை தவிர்த்து) கடந்த ஜனவரி 30-ந் தேதியில் இருந்து தந்தை பெரியார் வன உயிரின சரணாலயமாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்