மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
விக்கிரவாண்டி அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அருகே உள்ள மதுரபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தவுட் பையன். இவரது மகன் குகன். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தனது தாய் சத்தியவாணி(வயது 42), அக்காள் செல்வி(32) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கோலியனூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நேற்று சென்றார்.
அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் 3 பேரும் அதே மோட்டார் சைக்கிளில் மதுரபாக்கத்திற்கு புறப்பட்டனர். விக்கிரவாண்டி அருகே மண்டபம் என்ற இடத்தில் இரவு 9 மணி அளவில் சென்றபோது, இவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர், திடீரென சத்தியவாணி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தார்.
2 பேருக்கு வலைவீச்சு
அப்போது சத்தியவாணி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர், உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, தாலி சங்கிலியை பறித்துச்சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.