ஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு

ஆண்டிமடம் அருகே ஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.;

Update: 2023-10-08 19:32 GMT

ஆடுகள் திருட முயற்சி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் தஞ்சாவூர் சாவடி மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் செல்வராயர் (வயது 78). இவர் ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு இரவில் தனது வீட்டில் ஆடுகளை கட்டி வைத்து தூங்கி கொண்டு இருந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே வந்து பார்த்தார்.

அப்போது வாலிபர்கள் சிலர் ஆடுகளை திருடி தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏற்றி செல்ல முயன்றனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராயர் மற்றும் அவரது மனைவி சத்தம் போடவே ஆடுகளை விட்டு விட்டு அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

5 பேர் கைது

இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் சாவடி கொழைத்தெருவை சேர்ந்த அறிவழகன் மகன் ஹரிவிஜய் (23), மணிகண்டன் மகன் மனோஜ்குமார் (18), மகாராஜன் மகன் சூர்யா (19), விஜயபாஸ்கர் மகன் ஜெயசூர்யா (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்