பெண் கழுத்தை அறுத்து கொலை:கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

பரமத்திவேலூர் அருகே பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-13 18:32 GMT

பரமத்திவேலூர்

பெண் கொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், குச்சிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 70). ஓய்வு பெற்ற காவலாளி. இவரது மனைவி நல்லம்மாள் (65). இந்த தம்பதிக்கு கீதா, கோமதி, யமுனா என்ற 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சண்முகமும் அவரது மனைவி நல்லம்மாளும் குச்சிக்காடு தோட்டத்தில் தனியாக வசித்து வந்தனர். அடுத்த மாதம் கீதாவின் மகள் சிவானிக்கு திருமணம் நடைபெற இருந்தது.

கடந்த 13-ந் தேதி சண்முகத்தின் வீட்டு மாடி படிக்கட்டு வழியாக உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த நல்லம்மாள், அவரது கணவர் சண்முகம் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி இரும்பு கம்பியால் அவர்களை தாக்கினர். மேலும் நல்லம்மாளை கழுத்தை அறுத்து படுகொலை செய்த அந்த கும்பல் வீட்டில் இருந்த பூட்டை எடுத்து வெளிக்கதவை பூட்டி விட்டு சென்றுள்ளது.

5 தனிப்படைகள்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த சண்முகத்தை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு தனிப்படை போலீசார் சண்முகத்தின் உறவினர்கள் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்