கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 5 பேர் கைது

கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-14 14:28 IST

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்து வந்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை வலை வீசி தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் தலைமையில் போலீசார் ஊரப்பாக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகப்படும்படி அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 பெண்கள், 3 வாலிபர்களை போலீசார் வழிமறித்து விசாரித்த போது அவர்கள் 5 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள செம்மஞ்சேரி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த மோசஸ் (வயது 30), ஷலியா என்கிற குரு (23), வசந்தி (30), ரேவதி (23) மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த துளசிதாஸ் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ரேவதிபுரம் பகுதியில் ஒரு தையல் கடையின் பூட்டை உடைத்து அந்த கடையில் இருந்த தையல் எந்திரம் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடியதை ஒப்புக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு தையல் எந்திரம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

தனியாக இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் திருடுவதற்கு செல்லும்போது ரோந்து போலீசார் எப்படியாவது வழிமறித்து விசாரிக்கின்றனர். அதனால் அன்றைய தினம் திருட முடியாமல் போய்விடுகிறது. எனவே தான் போலீசாரிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காகவும் அவர்களுக்கு எங்கள் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காகவும் பெண்களுடன் சென்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டோம்.

ஏனென்றால் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் பெண்களை அழைத்து செல்லும்போது போலீசார் விசாரித்தால் கணவன் மனைவி என்று கூறி நாடகம் ஆடிவிட்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறோம் என்று கூறி தப்பித்து விடுவோம் என்றனர். இதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்