போதை மாத்திரைகள் விற்ற 5 பேர் கைது

ஆண்டிப்பட்டியில், போதை மாத்திரைகள் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-09-07 17:16 GMT

ஆண்டிப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள் தலைமையிலான போலீசார், ஆண்டிப்பட்டி சீனிவாசநகர் சுடுகாடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கூடியிருந்த வாலிபர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் வலி நிவாரண மாத்திரைகள் 6 அட்டைகள் இருந்தன. அந்த மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த மாத்திரைகளை போதைக்காக வாலிபர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே வாங்க முடியும். ஆனால் அந்த மாத்திரைகள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அந்த மாத்திரைகளை ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிபட்டியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 23), ஆண்டிப்பட்டியை சேர்ந்த சந்தானமுத்து (25), வைரம் (28), டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன் (22), பாப்பம்மாள்புரத்தை சேர்ந்த நம்பி ராஜன் (20) ஆகியோர் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்