குளத்தில் மண் அள்ளிய 5 பேர் கைது

சின்னமனூரில் குளத்தில் மண் அள்ளிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 டிப்பர் லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2023-06-24 20:00 GMT

மண் அள்ளிய கும்பல்

சின்னமனூரில், முத்துலாபுரம் சாலையில் கருங்கட்டான்குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த சில வாரங்களாக அனுமதியின்றி ஒரு கும்பல் பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் மண் அள்ளி வருவதாகவும், இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணை போவதாகவும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தநிலையில் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று கருங்கட்டான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த குளத்தில் 5 பேர் கொண்ட கும்பல் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மண் அள்ளிக்கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.

5 பேர் கைது

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் சின்னமனூரை சேர்ந்த நாகராஜ், ராஜசேகர், செல்வன், சின்னகருப்பன், மலைச்சாமி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 டிப்பர் லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குளத்தில் பொதுப்பணித்துறையின் அனுமதியுடன் குளத்தில் மண் அள்ளப்பட்டதா? அல்லது சமூக விரோதிகள் மண்ணை அள்ளி தனியாருக்கு விற்பனை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கருங்கட்டான்குளத்தில் பல நாட்களாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஏராளமான டிப்பர் லாரிகளில் மண் அள்ளப்பட்டு வந்தது. ஆனால் அப்போது கண்டுகொள்ளாமல் இருந்த போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று திடீரென்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மண் அள்ளுவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் சென்றதால் இந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளனர். எனவே இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மண் அள்ளும் நபர்கள் மீதும், அதற்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்