கேரளாவில் இருந்து கழிவுகளை கொட்ட வந்த 5 பேர் கைது

மதுக்கரை அருகே கேரள கழிவுகளை கொட்ட வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-24 22:15 GMT

மதுக்கரை அருகே கேரள கழிவுகளை கொட்ட வந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். லாரி சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரியில் கேரள கழிவுகள்

கோவை மதுக்கரை அருகே கருஞ்சானி கவுண்டன்பாளையம் உள்ளது.

இங்குள்ள காலி இடத்தில் கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகளை சிலர் கொட்ட முயன்றனர்.

இதை அறிந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து லாரியை சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் லாரியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அந்த லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது55) என்பதும், சுமை தூக்கும் தொழிலாளர்களாக உக்கடத்தை சேர்ந்த ஹக்கீம் (33), கபீர் (49), உபைது (39) சுந்தராபுரத்தை சேர்ந்த இஸ்மாயில் (34) என்பதும் தெரியவந்தது.

5 பேர் கைது

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மதுக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் கழிவுகளை கொண்டு வந்து கொட்ட முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து லாரி டிரைவர் பாலகிருஷ்ணன், ஹக்கீம், கபீர், உபைது, இஸ்மாயில் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் கேரள கழிவுகளை கொட்டாமல் தடுக்க தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்