சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பெண் வியாபாரி கொலையில் தங்கை உள்பட 5 பேர் கைது

சைதாப்பேட்டையில் நடந்த பெண் வியாபாரி கொலை வழக்கில் அவருடைய தங்கை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சேர்ந்து வாழ விடமாட்டேன் என மிரட்டியதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து உடன் பிறந்த சகோதரியை கொன்றது தெரியவந்தது.;

Update:2023-07-24 03:23 IST

தாம்பரம்,

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் புவனேஷ். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 34). இவர், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த 19-ந் தேதி இரவு வழக்கம்போல் மின்சார ரெயிலில் பழவியாபாரம் செய்து விட்டு சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் ராஜேஸ்வரியை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொன்றுவிட்டு அதே ரெயிலில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாம்பலம் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

5 பேர் கைது

கொலையாளிகளை பிடிக்க ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின்பேரில் ெரயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு மேற்பார்வையில் துணை சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் வைரவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அரிதாஸ், சிவகுரு, மணிகண்டன் மற்றும் போலீசார் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் சென்னை மாநகர் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் தொடந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக கொலையான ராஜேஸ்வரியின் தங்கையான நாகவல்லி(23), அவருடைய கணவரான சக்திவேல்(23) மற்றும் ஜெகதீசன்(23), சூர்யா(19), ஜான்சன்(19) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைதானர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

முன்விரோதம்

கொலையான ராஜேஸ்வரியும், தைானவர்களும் புறநகர் மின்சார ரெயில்களில் பழ வியாபாரம் செய்து வந்தார்கள். அப்போது ராஜேஸ்வரி பெண் தாதா போல் செயல்பட்டு வந்ததாகவும், தான் விற்கும் பழங்களை மற்ற வியாபாரிகள் யாரும் விற்க கூடாது என்று அனைவரையும் மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ராஜேஸ்வரியின் வளர்ப்பு மகனை, சக்திவேல், ஜெகதீசன் ஆகியோர் தாக்கினர். இது தொடர்பாக ராஜேஸ்வரி மாம்பலம் ரெயில் நிலையத்தில் அவர்கள் 2 பேர் மீதும் புகார் அளித்தார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

சேர்ந்து வாழவிட மாட்டேன்

மேலும் ராஜேஸ்வரியின் தங்கை நாகவல்லி, திருமணமாகி தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். திருமணத்துக்கு முன்பே அவருக்கு சக்திவேலுடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணத்துக்கு பிறகும் அவருடனான தொடர்பை கைவிடவில்லை. இதனை ராஜேஸ்வரி கண்டித்தார்.

இதற்கிடையில் நாகவல்லி தனது கணவரை விட்டு பிரிந்து சக்திவேலை 2-வது திருமணம் செய்து அவருடன் சென்றுவிட்டார். இது தொடர்பாக கிண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் நாகவல்லி சக்திவேலுடன்தான் வாழ்வேன் என உறுதியாக கூறிவிட்டார்.

அப்போது ராஜேஸ்வரி, "உங்கள் இருவரையும் சேர்ந்து வாழ விடமாட்டேன். கொலை செய்து விடுவேன்" என மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன நாகவல்லி, "எனது அக்காள் சொன்னபடி நம்மை கொன்றுவிடுவாள். அதற்கு முன்பாக அவளை கொன்றுவிட வேண்டும்" என்றார். இதையடுத்து சக்திவேலுடன் விழுப்புரம் சென்று தங்கினார். அங்கு திருட்டில் ஈடுபட்டு அதில் கிடைத்த நகையை விற்று ரூ.3 லட்சத்தை சேர்த்தனர்.

நோட்டமிட்டனர்

பின்னர் சென்னை வந்த இருவரும், தங்களை சேர்ந்து வாழ விடமாட்டேன் என்று கூறிய ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டனர். இதற்காக ராஜேஸ்வரியால் பாதிக்கப்பட்ட மற்ற 3 பேரையும் கூட்டாளியாக சேர்த்து கொண்டனர். ராஜேஸ்வரியை கொலை செய்துவிட்டு தங்களிடம் இருக்கும் ரூ.3 லட்சத்தை வழக்கு செலவுக்கு வைத்து ெகாள்ள முடிவு செய்தனர்.

பின்னர் ராஜேஸ்வரியை கொலை செய்ய தகுந்த தருணம் பார்த்து தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அதன்படி 19-ந்தேதி இரவு மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்த ராஜேஸ்வரியை பின்தொடர்ந்து வந்த சக்திவேல் உள்பட 4 பேரும் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் அவரை வெட்டிக்கொன்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

கைதானவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தனிப்படையினருக்கு பாராட்டு

இந்த கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினருக்கு ரொக்க பரிசுகளை ெரயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன் ராமு வழங்கி பாராட்டினார்.

பின்னர் நிருபர்களிடம் பொன் ராமு கூறும்போது, "சைதாப்பேட்டை ெரயில் நிலையத்தில் நடந்த பெண் பழ வியாபாரி கொலை வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு 3 நாட்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்து 5 பேரை கைது செய்துள்ளோம். இதில் 3 பேர் கோவளத்திலும், 2 பேர் நங்கநல்லூரில் கைது செய்யப்பட்டனர். ரெயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கல்லூரி, அலுவலக நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபடுவார்கள்" என்றார்.

சாவில் குத்தாட்டம்

தனது உடன் பிறந்த சகோதரியை கள்ளக்காதலன் மூலம் கொலை செய்த நாகவல்லி தன் மீது போலீசார் மற்றும் மற்றவர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க ராஜேஸ்வரியின் உடலை பார்த்து கதறி அழுது புலம்பினார். மேலும் இறுதி ஊர்வலத்தில் குத்தாட்டமும் போட்டார். இதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்