நள்ளிரவில் பயங்கர விபத்து.. சேலம் அருகே ஆம்னி பஸ் மீது டிப்பர் லாரி மோதியதில் 5 பேர் பலி

சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் மீது டிப்பர் லாரி மோதியதில் 5 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2022-09-18 00:55 GMT

சேலம்:

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 65), ரவிக்குமார் (41), செந்தில்வேலன் (40), சுப்பிரமணி (40) உள்பட அவர்களது குடும்பத்தினர் 7 பேர் சென்னையில் நடைபெறும் உறவினர் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்ல ஒரு ஆம்னி பஸ்சில் டிக்கெட் எடுத்து இருந்தனர்.

அந்த பஸ் சேலத்தில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது. அந்த பஸ்சில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நள்ளிரவு 12.45 மணி அளவில் அந்த பஸ் பெத்தநாயக்கன்பாளையம் வந்தது. அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நின்றது.

இதைத்தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவுக்கு செல்வதற்காக திருநாவுக்கரசு உள்பட அவரது உறவினர்கள் பஸ்சின் வலது பக்கமாக நின்று கொண்டு உடைமைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை பஸ்சில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.

அப்போது சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற டிப்பர் லாரி பஸ்சின் வலது பக்கத்தில் கண்இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிவிட்டு, உரசியபடி சென்றது. இந்த விபத்தில் திருநாவுக்கரசு, ரவிக்குமார், செந்தில்வேலன், சுப்பிரமணி மற்றும் பஸ் கிளீனர் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் மீது மோதிய லாரியின் சக்கரத்தில் கிளீனரின் உடல் சிக்கி, சிறிது தூரம் இழுத்து சென்றது. இதனால் அந்த பகுதி ரத்தக்கறையாக காட்சி அளித்தது.

மேலும் இந்த விபத்தில் விஜயா, பிரகாஷ், மாதேஸ்வரி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் ஆம்னி பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி தப்பித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஏத்தாப்பூர் மற்றும் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்னி பஸ் மீது டிப்பர் லாரி மோதி 5 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்