பெண் கொலையில் 5 பேர் கைது
சேரன்மாதேவியில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
சேரன்மாதேவி:
சேரன்மாதேவியில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெட்டிக்கொலை
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிள்ளையார். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 56). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுபற்றி சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மதுபோதையில் தகராறு
விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ராசுகுட்டி (28). இவரும், இவரது நண்பர்களும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ெரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தனர். அங்கு அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் கணேசன் மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்பின்னர் கணேசன் மற்றும் அவரது தரப்பினர் ராசுகுட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு ராசுகுட்டி தாயாரும், பெரியம்மா மாரியம்மாளும் இருந்துள்ளனர். உன் மகனை எங்கே? என கேட்டு ராசுகுட்டியின் தாயாரை வெட்ட முயன்றனர். இதனை தடுக்க வந்த மாரியம்மாளை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
5 பேர் கைது
இதுதொடர்பாக நடராஜன் மகன்கள் சுரேஷ், ஆறுமுகம், கணேசன், கணபதி மகன் குட்டி பாண்டியன், பண்டாரம் மகன் நெல்லையப்பன் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.