மீமிசல் பகுதியில் ஆடுகளை திருடிய 5 பேர் கைது
மீமிசல் பகுதியில் ஆடுகளை திருடிய வாலிபர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கோட்டைப்பட்டினம்:
ஆடுகள் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கிளரிவயல் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 49). இவர் அதே பகுதியில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பட்டியில் இருந்து 21 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து அவர் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் தலைமையிலான தனிப்படை போலீசார்இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திருப்புனவாசல் பகுதியில் சந்தேகப்படும்படி சில நபர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
5 பேர் கைது
விசாரணையில் அவர்கள் அப்பகுதியில் ஆடுகளை திருட வந்தது தெரியவந்தது. மேலும் மீமிசல் பகுதியில் ஆடுகளை திருடியது இவர்கள்தான் என்று தெரியவந்தது. பின்னர் அவர்களை மீமிசல் போலீஸ் நிலையம் அழைத்து வந்து மேலும் விசாரணை செய்தனர். அதில் அவர், ராமநாதபுரம் மாவட்டம், புத்தநேந்தலை சேர்ந்த சரத்பாபு (28), கடலாடியை சேர்ந்த ரமேஷ் (33), பட்டனம்காத்தானை சேர்ந்த காளிதாஸ் (46), தஞ்சை மாவட்டம், முதுகாடு பகுதியை சேர்ந்த சூர்யா (19), மோகன் (23) என்பதும், அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆடுகளை திருடி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சரத்பாபு உள்பட 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 58 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.