தி.மு.க. பெண் கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

மலுமிச்சம்பட்டியில் தி.மு.க. பெண் கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-13 20:30 GMT

மலுமிச்சம்பட்டி

மலுமிச்சம்பட்டியில் தி.மு.க. பெண் கவுன்சிலரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரிவாள் வெட்டு

கோவை மலுமிச்சம்பட்டி அருகே அவ்வை நகரை சேர்ந்தவர் சித்ரா(வயது 44). மலுமிச்சம்பட்டி ஊராட்சி தி.மு.க. கவுன்சிலர். இவருடைய கணவர் ரவிக்குமார்(47). இவர்களது மகன் மோகன்(24).

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவில் சித்ராவின் வீட்டுக்குள் 5 பேர் கும்பல் நுழைந்தது. அவர்கள் சித்ரா, அவரது கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

5 பேர் கைது

மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அரிவாள் வெட்டில் ஈடுபட்ட மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ராஜன் என்ற ராஜா(23), பிச்சைபாண்டி(23), வைசியாள் வீதியை சேர்ந்த முத்துப்பாண்டி(24), அம்மா நகரை சேர்ந்த மகேஷ் கண்ணன்(22), உக்கடத்தை சேர்ந்த ஸ்ரீரக்சித்(19) ஆகியோரை கைது செய்தனர். அதில் ராஜன், பிச்சைபாண்டி, முத்துப்பாண்டி ஆகியோர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

மது குடித்ததால்...

பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

சித்ராவின் வீடு அருகே உள்ள ரேஷன் கடை பகுதியில் மாலை நேரங்களில் ராஜா, பிச்சைப்பாண்டி ஆகியோர் அமர்ந்து மது குடித்து வந்தனர். இதை அவர் கண்டித்தார். இதனால் அவர்கள் ஆத்திரம் அடைந்து மகேஷ் கண்ணன், ஸ்ரீரக்சித், முத்துப்பாண்டி ஆகியோருடன் சேர்ந்து வீடு புகுந்து சித்ரா மற்றும் அவரது கணவர், மகனை அரிவாளால் வெட்டி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்