தனியார் நிறுவன ஊழியரை கல்லால் தாக்கிய 5 பேர் கைது

கிணத்துக்கடவு அருகே தனியார் நிறுவன ஊழியரை கல்லால் தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-13 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே தனியார் நிறுவன ஊழியரை கல்லால் தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தனியார் நிறுவன ஊழியர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரங்குளத்தை சேர்ந்தவர் ஆல்பின் அகஸ்டின்(வயது 23). கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி புத்தூர் அம்மன் வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். மேலும் கொண்டம்பட்டியில் இருந்து அரசம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கல்லால் தாக்குதல்

இந்த நிலையில் ஆல்பின் அகஸ்டின் நேற்று முன்தினம் இரவில் கொண்டம்பட்டியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.

அப்போது கொண்டம்பட்டி காமாச்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த காவியபிரபு(23), வீரகுமார் (23), விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் (27), பெரிய வீதியை சேர்ந்த பிரபாகரன் (20), நடராஜன் (33) ஆகியோர் அவரை வழிமறித்து திடீரென தகராறில் ஈடுபட்டனர். மேலும் கல்லால் தாக்கியதில் ஆல்பின் அகஸ்டின் படுகாயம் அடைந்தார்.

ஜீப் கண்ணாடி உடைப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும், அவர் வேலை செய்யும் தனியார் நிறுவன மேலாளர் அபுசாலி, ஜீப்பில் வந்து தனது டிரைவர் சமீருடன் சேர்ந்து ஆல்பின் அகஸ்டினை மீட்டு செல்ல முயன்றார். ஆனால் ஜீப்பை மறித்து மீண்டும் தகராறு செய்தனர். மேலும் ஜீப்பின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் தகராறில் ஈடுபட்ட வீரகுமார், காவிய பிரபு, மணிகண்டன், பிரபாகரன், நடராஜன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்