டாஸ்மாக் கடையில் ரூ.5¾ லட்சம் கொள்ளை

பாடாலூரில் கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் கடையில் ரூ.5¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-09-05 18:13 GMT

கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மயானத்தின் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக துறைமங்கலத்தை சேர்ந்த சின்னசாமி மகன் ராம்குமார் என்பவரும், உதவியாளரான களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஜெகன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 9.40 மணியளவில் வழக்கம்போல் மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மாஸ்க் அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி ராம்குமாரையும், ஜெகனையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி கல்லா பெட்டியில் இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தையும், லாக்கரில் இருந்த ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்தையும் என மொத்தம் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்தை பறித்துக்கொண்டதோடு, அவர்களுக்கு பிடித்தமான விலை உயர்ந்த மதுபான பாட்டில்களையும் எடுத்து கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பி சென்று தலைமறைவாகினர்.

போலீசார் விசாரணை

இந்த திடீர் சம்பவத்தால் நிலைகுலைந்த 2 பேரும் உடனே பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையில் கத்தி முனையில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் பாடாலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்