ஆத்தூரில் புத்தாண்டு தினத்தில் 5 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்

ஆத்தூரில் புத்தாண்டு தினமான நேற்று 5 குடிசைகள் தீயில் எரிந்து நாசமானது.;

Update: 2023-01-01 20:52 GMT

ஆத்தூர்:

கூலித்தொழிலாளர்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேட்டை அங்கமுத்து தெருவில் ஏராளமான கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பெரும்பாலான வீடுகள் குடிசைகளாக உள்ளன.

இந்த பகுதியை சேர்ந்தவர்கள் அய்யாவு, சிவா, அன்பு, செந்தில், மற்றும் ராணி. இவர்களது வீடுகள் தென்னங்கீற்றால் வேயப்பட்ட குடிசைகள் ஆகும். மேலும் குடிசைக்கு மேலே பாதுகாப்புக்காக தகரம் போட்டு வைத்திருந்தனர். செந்தில் என்பவரது குடிசையில் சேட்டு என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

திடீர் தீ

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சேட்டு, வீட்டில் சமையல் செய்ய கியாஸ் அடுப்பை பற்ற வைத்து விட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று சேட்டு வசித்து வந்த குடிசை வீடு தீப்பிடித்தது. இதனால் அருகில் இருந்த சிவா, அய்யாவு, அன்பு, ராணி ஆகியோர்களது வீடுகளுக்கும் தீ பரவியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்ெகாண்டு வெளியே ஓடினார்கள்.

உடனே அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

5 குடிசைகள் எரிந்து நாசம்

இதனிடையே மின்வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். இந்த தீ விபத்தில் 5 குடிசைகளும் தீயில் எரிந்து முற்றிலும் நாசமானது. வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள், துணிமணிகள் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் என அனைத்தும் எரிந்து சேதம் அடைந்தன. சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, நகராட்சி தலைவர் பபிதா ஆகியோர் விரைந்து வந்து வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரண பொருட்களை வழங்கினார்கள். மேலும் தீ விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புத்தாண்டு தினமான நேற்று ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்