திருவள்ளூர் மாவட்டத்தில் 5 போலி டாக்டர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.;
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, பாண்டியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் (வயது 43). இவர் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பஜார் வீதியில் அனுமதியின்றி ரத்த பரிசோதனை நிலையம் என பெயர் வைத்துக்கொண்டு, அங்கு நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக திருத்தணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், திருத்தணி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் ராதிகா தேவி ஆகியோர் நேற்று கே.ஜி.கண்டிகையில் இயங்கி வந்த போலி கிளினிக்கிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் ராபர்ட் பிளஸ்-2 மற்றும் லேப் டெக்னீசியன் படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அதிகாரிகள் அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் நோயாளிகளுக்கு போலி மருத்துவம் பார்த்த போலி டாக்டர் ராபர்ட்டை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட தனிப்படை போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் அரசு டாக்டர் லட்சுமி நாராயண் உதவியுடன் பள்ளிப்பட்டு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பள்ளிப்பட்டு பகுதிகளில் 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த மோகன் (47), வடிவேலு (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், செங்கட்டானூர் பகுதியில் போலி டாக்டர் ஞானபிரகாசத்தை (40) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர் எலக்ட்ரோபதி என்ற படிப்பை முடித்துவிட்டு மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது.
இதைபோல திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரக்கோவில் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் அவரது கணவர் கிளினிக் வைத்து நடத்திய அனுபவத்தை கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருவாலங்காடு போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கிளிக்கில் சோதனை நடத்தினர். இதில் மூதாட்டி ரெஜினா (74) அந்த பகுதியில் 15 ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் புகார் அளித்ததின் பேரில் திருவாலங்காடு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைபோல கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிறபேட்டையில் முதலுதவி மையம் என்ற பெயரில் மருந்து கடையுடன் சேர்த்து நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்த மகேஷ் (31) மற்றும் கவரைப்போட்டையில் சித்தா மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த ஞானசுந்தரி (46) ஆகிய 2 பேரை பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.