பள்ளிக்கூட பஸ் மீது கார் மோதியதில் 5 பக்தர்கள் பலி
பனவடலிசத்திரம் அருகே பள்ளிக்கூட பஸ் மீது கார் மோதியதில் 5 பக்தர்கள் உயிரிழந்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.;
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் அருகே பள்ளிக்கூட பஸ் மீது கார் மோதியதில் 5 பக்தர்கள் உயிரிழந்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விவசாயி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகன் குருசாமி (வயது 45). விவசாயியான இவர் நேற்று காலையில் தன்னுடைய குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்றார்.
பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு, மாலையில் தங்களது ஊருக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். அந்த காரை கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையாபுரத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் அய்யனார் (42) ஓட்டினார்.
சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவர்கள்
இதற்கிடையே, சங்கரன்கோவில் தனியார் பள்ளிக்கூடத்தில் நடந்த சிறப்பு வகுப்பில் பங்கேற்ற பிளஸ்-2 மாணவர்களை மாலையில் அவர்களது வீடுகளுக்கு கொண்டு சென்று விடுவதற்காக பள்ளிக்கூட பஸ் புறப்பட்டு சென்றது.
நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் பனவடலிசத்திரம் அருகே மேலநீலிதநல்லூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் பள்ளிக்கூட பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஊத்துமலை அரண்மனை தெருவைச் சேர்ந்த தங்கம் (55) என்பவர் திடீரென்று நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதனால் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பள்ளிக்கூட பஸ்சை பக்கவாட்டில் டிரைவர் திரும்பினார்.
பஸ்-கார் மோதல்
அப்போது எதிரே குருசாமியின் குடும்பத்தினர் வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போன்று நொறுங்கியது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் அலறி துடித்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து பனவடலிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
பரிதாப சாவு
அப்போது படுகாயம் அடைந்த குருசாமி, அவருடைய மனைவி வேலுத்தாய் (40), குருசாமியின் தாயார் சீதாலட்சுமி (60), டிரைவர் அய்யனார் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
படுகாயமடைந்த குருசாமியின் மகன் மனோஜ்குமார் (21), மகள் கற்பகவல்லி (18) ஆகியோரை சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். கற்பகவல்லியை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாணவிகள் காயம்
விபத்துக்குள்ளான பள்ளிக்கூட பஸ்சில் இருந்த மாணவிகள் விசாலினி, அபிநயா உள்ளிட்ட 5 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் சங்கரன்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்து காயமடைந்த தங்கம் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்த 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு வந்த கலெக்டர் துரை ரவிச்சந்திரன், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
கண்காணிப்பு கேமரா காட்சி
இந்த கோர விபத்தால் நெல்லை- சங்கரன்கோவில் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்ைத மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு கதிர் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கார் மீது பள்ளிக்கூட பஸ் மோதிய காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
பனவடலிசத்திரம் அருகே பள்ளிக்கூட பஸ் மீது கார் மோதிய விபத்தில் 5 பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.