ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் செல்போன், பணம் திருடிய 5 போ் கைது
விக்கிரவாண்டி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நூதன முறையில் செல்போன், பணத்தை திருடிவிட்டு வேறு பஸ்சில் ஏறி தப்பி செல்ல முயன்ற திருச்சி வாலிபர்கள் உள்பட 5 பேரை போலீசார் துரத்தி பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;
விக்கிரவாண்டி
மர்ம நபர்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை சேர்ந்தவர் சர்தார் மனைவி ஆயிஷா(வயது 51). இவர் பண்ருட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் திண்டிவனம் பஸ் நிலையத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆயிஷா நின்றபடியே பயணம் செய்தார். அப்போது அவருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த மர்மநபர் ஒருவர் கீழே சில்லறை காசுகள் கிடப்பதாக ஆயிஷாவிடம் கூறினாா். உடனே அவர் கீழே கிடந்த இரண்டு 5 ரூபாய் நாணயங்களை எடுத்தார்.
செல்போன், பணம் திருட்டு
பஸ் விக்கிரவாண்டி சுங்கசாவடியை கடந்து சென்ற போது ஆயிஷா தன்னிடம் இருந்த பையை பார்த்தபோது அதில் இருந்த 2 செல்போன், ரூ.5 ஆயிரம்ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் மேற்கொண்ட பொருட்களை திருடிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.
இதையடுத்து டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார். அப்போது ஆயிஷாவிடம் பஸ்சில் சில்லறை கீழே கிடப்பதாக கூறிய மர்ம நபர் உள்பட 5 பேர் பஸ்சில் இருந்து இறங்கி எதிரே திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சில் அவரச அவசரமாக ஏறினர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஆயிஷா கூச்சல் எழுப்பினார்.
துரத்தி பிடித்தனர்
இதைப்பார்த்து சுங்கசாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள், போக்குவரத்து மற்றும் ரோந்து போலீசார் வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பி சென்ற அரசு பஸ்சை பின்னால் துரத்தி சென்று மடக்கினர். பின்னர் குறிப்பிட்ட மர்ம நபர்களைபிடித்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இவர்களிடம் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம், கவுண்டன்பட்டியை சேர்ந்த யோகராஜ்(வயது 22), பாலக்குறிச்சி பாண்டியன்(34), கல்லுப்பட்டி, கண்ணதாசன்(24), துறவன்குறிச்சி பிரதாப்(28), சிவகங்கை மாவட்டம், சிங்கபுனேரி பாலு(44) என்பது தொியவந்தது.
5 பேர் கைது
மேலும் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இவர்கள் பஸ்சில் சில்லறை நாணயங்களை கீழே போட்டுவிட்டு சில்லறை கீழே கிடப்பதாக கூறி ஆயிஷாவின் கவனத்தை திசை திருப்பி அவரது பையில் இருந்த 2 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் விக்கிரவாண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.