ரூ.463 ¼ கோடியில் கதவணை கட்டும் பணி

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர்- குமாரமங்கலம் இடையே ரூ.463 ¼ கோடியில் கதவணை கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

Update: 2023-09-23 18:45 GMT

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர்- குமாரமங்கலம் இடையே ரூ.463 ¼ கோடியில் கதவணை கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

ரூ.463 கோடியே 24 லட்சத்தில் கதவணை

மயிலாடுதுறை மாவட்டத்தையும், கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.463 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் கதவணை கட்டப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து திட்ட வரைப்படத்தை கொண்டு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த கதவணையானது 1064 மீட்டர் நீளத்திற்கு, 84 கதவுகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் 0.33 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் கட்டப்படுகிறது. இப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை விரைவில் முடிக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

அதனைத்தொடர்ந்து நரிமுடுக்கு வாய்க்கால் நீரொழிங்கி கட்டப்பட்டு வருவதையும், தெற்குராஜன் வாய்க்கால் நீரொழிங்கி கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளின் கோரிக்கையின்படி கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று செயற்பொறியாளருக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

அப்போது நீர்வளத்துறை(சிறப்பு திட்டங்கள்) பாலமுருகன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி கலெக்டர் யுரேகா, உதவி செயற்பொறியாளர்கள் செல்வகாந்தி, ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்