சர்க்கரை ஆலையின் 45-வது பேரவைக்கூட்டம்

சர்க்கரை ஆலையின் 45-வது பேரவைக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-28 18:32 GMT

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 45-வது பேரவைக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் விஜயராஜ்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கரும்பை விவசாயிகளிடம் இருந்து எந்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசு நிர்ணயிக்கிறது. அப்படி அந்த விலைக்கு மேல் கூடுதல் ஊக்க தொகையாக இந்த ஆண்டு மட்டும் ரூ.214 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கிவைத்த திட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கொடுத்த விவசாயிகள் அனைவருக்கும், 2 வாரத்திற்குள்ளாக ரூ.199 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் கடந்த ஆண்டில் ரூ.25 கோடியே 32 லட்சம் நட்டத்தில் இயங்கி பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ரூ.16 கோடி நட்டமாக குறைந்து கடந்த ஆண்டு ரூ.9 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் ஆலை லாபத்தில் இயங்கும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலை வகித்து பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் மேலாண்மை இயக்குனர் ரமணி தேவி, சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு உற்பத்தியாளர்கள், ஆலையின் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் சர்க்கரை கழக தலைவரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை மீது கொடுக்கப்பட்ட கடனில் நலிவடைந்த ஆலையாக அறிவித்தபோது விதிக்கப்பட்ட கடன் சலுகையை அமல்படுத்த வேண்டும். 45-வது பேரவை கூட்டத்தின்போது, பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் தமிழக அரசின் பங்குத்தொகை எவ்வளவு என்பதையும், விவசாயிகள், பங்குதாரர்களின் பங்குத்தொகை எவ்வளவு என்பதையும் வெளியிடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்