44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி; சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பக வரும் வீரர்கள், வீராங்கனைகளுக்காக சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.;
சென்னை,
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. உலகளவில் செஸ் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய முன்னணி வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியை மிக பிரமாண்டமான முறையில் நடத்திட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த செஸ், ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அது மட்டுமின்றி மாமல்லபுரம் வரும் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கும் அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்க உள்ளது.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்களுக்காக சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில், உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பார்வையாளர்கள் சிரமம் இல்லாமல் சோதனைகளை முடித்து வெளியேற உரிய வசதிகள் ஏற்படுத்தவும், குடியுரிமை, சுங்க சோதனை பாதுகாப்பு, மருத்துவ சோதனை என அனைத்து பிரிவுகளிலும் தனி கவுண்டர்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.