தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,231 வழக்குகளில் ரூ.23¼ கோடிக்கு சமரசம்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,231 வழக்குகளில் ரூ.23¼ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Update: 2023-02-11 20:24 GMT

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி கே.பாபு தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், 3-வது கூடுதல் சார்பு நீதிபதியுமான எஸ்.சோமசுந்தரம் வரவேற்று பேசினார். கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள் கே.ஜெயக்குமார், பி.தங்கவேல், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கே.கருணாநிதி, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பி.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் மாஜிஸ்திரேட்டு பாலாஜி நன்றி கூறினார்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் 13 அமர்வுகளும், மணப்பாறை, துறையூர், முசிறி, லால்குடி, ஸ்ரீரங்கம், தொட்டியம் ஆகிய கோர்ட்டுகளின் வளாகத்தில் தலா ஒரு அமர்வும் என 19 அமர்வுகளில், குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், தொழிலாளர் இழப்பீட்டு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், இடப்பிரச்சினை சம்பந்தமான வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என்று 9,128 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இரு தரப்பினரையும் நீதிபதிகள் அழைத்துப் பேசி சமரசம் செய்து 4,231 வழக்குகளில் ரூ.23 கோடியே 34 லட்சத்து 21 ஆயிரத்து 548-க்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்