சேலத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 42 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
372 மனுக்கள்
முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 372 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 18 மனுக்களை கலெக்டர் கார்மேகம் பெற்று கொண்டார். இதையடுத்து அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலெக்டர் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
இதனை தொடர்ந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 பேருக்கு தலா ரூ.83,500 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களும், 5 பேருக்கு தலா ரூ.6,880 மதிப்பிலான தையல் எந்திரங்களும், 30 பேருக்கு தலா ரூ.12,500 மதிப்பிலான கைபேசிகளும், 5 பேருக்கு தலா ரூ.7,500 மதிப்பிலான கால் தாங்கிகளும் என மொத்தம் 42 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.