ஓவியப்போட்டியில் 417 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

வேலூரில் நடந்த ஓவியப்போட்டியில் 417 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2023-08-17 12:20 GMT

இந்திய குழந்தைகள் நலசங்கம் வேலூர் மாவட்ட கிளை சார்பில் தேசிய ஓவியப்போட்டி வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தொடங்கி வைத்தார். வேலூர் தாசில்தார் செந்தில் முன்னிலை வகித்தார். இந்திய குழந்தைகள் நலசங்க வேலூர் மாவட்ட கவுரவ செயலாளர் சுசீலா சிதம்பரம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி கலந்து கொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 38 மாணவர்கள் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற 9 மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

ஓவியப்போட்டி சாதாரண குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் என்று 2 வகையாக பிரிக்கப்பட்டு வயது வாரியாக நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 102 அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 417 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். மாற்றுத்திறன் குழந்தைகள் சிலர் கால்கள் மூலம் ஓவியங்கள் வரைந்து ஆச்சரியப்படுத்தினர். தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பரிசு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்