காரில் கடத்தி வந்த 400 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

திண்டுக்கல் அருகே காரில் கடத்திய 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-17 18:45 GMT

போலீசார் சோதனை


திண்டுக்கல் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் தாவூது தலைமையிலான போலீசார் நேற்று திண்டுக்கல்-திருச்சி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முள்ளிப்பாடி செட்டியபட்டி அருகே மின்னல் வேகத்தில் வந்த 2 சொகுசு கார்களை போலீசார் நிறுத்தினர். பின்னர் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.


இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கார்களில் சோதனை செய்தனர். ஒரு காரில் மூட்டைகளில் 400 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சா கடத்தி வந்தது சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 26), பிரவீன் (29), சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்த சரவணக்குமார் (27) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 3 பேரையும் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


400 கிலோ கஞ்சா பறிமுதல்


இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 400 கிலோ கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்தார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-


திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபடும்படி போலீசாருக்கு உத்தரவிட்டேன். அதன்படி தனிப்படை போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தான் நேற்று இவர்கள் பிடிபட்டனர்.


விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வருவதும், திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. எனவே வெளிமாநிலங்களில் உள்ள கஞ்சா வியாபாரிகள், அவர்களிடம் தொடர்பில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.




Tags:    

மேலும் செய்திகள்