சரக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 400 கிலோ குட்கா பறிமுதல்
சித்தோட்டில் சரக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
பவானி
பவானியை அடுத்த சித்தோட்டில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அந்த காரை ஒரு சரக்கு ஆட்டோ முந்திச்செல்ல முயன்றது. அப்போது சரக்கு ஆட்டோ காரின் பின்பக்கத்தில் எதிர்பாராத வகையில் மோதியது. இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும், சித்தோடு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றார்கள்.
அவர்கள் வருவதற்குள் சரக்கு ஆட்டோவில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டார்கள். இதனால் போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்த போது அதில் மூட்டைகள் இருந்தன. அதை பிரித்து பார்த்தபோது உள்ளே தமிழக அரசால் தடைெசய்யப்பட்ட 20 கிராம் மதிப்பிலான பான் மசாலா பொருட்கள் 14,100 பாக்கெட்டுகளும், 3 கிராம் மதிப்பிலான குட்கா 24,420 பாக்கெட்டுகளும், 9 கிராம் மதிப்பிலான 4,992 பாக்கெட்டுகளும் என மொத்தம் சுமார் 399 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் சரக்குஆட்டோவை சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று, நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட சரக்கு ஆட்டோ பெருந்துறையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், அதை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு மாத வாடகைக்கு விட்டிருந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து போலீசார் குட்கா கடத்திய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இந்த தனிப்படை போலீசார் ஆந்திராவைச் சேர்ந்தவரையும், தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களின் மதிப்பு ரூ.3¼ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.