சிவகாசி அச்சகங்களில் ரூ.400 கோடிக்கு காலண்டர்கள் தயாரிப்பு
சிவகாசியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அச்சகங்கள் இயங்கி வருகின்றன. அதில் 100-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் பல்வேறு வகையான காலண்டர்கள் தயாரிப்பில் ஈடுபடுகின்றன.;
சிவகாசி,
சிவகாசியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அச்சகங்கள் இயங்கி வருகின்றன. அதில் 100-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் பல்வேறு வகையான காலண்டர்கள் தயாரிப்பில் ஈடுபடுகின்றன. இந்த தொழிலில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். தமிழகத்தில் சில மாவட்டங்கள் புயல் மழையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இதனால் காலண்டர் ஆர்டர் கொடுத்த பலர், தங்களது காலண்டர்களை வாங்காமல் இருந்தனர். தற்போது அந்த மாவட்டங்களில் இயல்புநிலை திரும்புகிறது.
இந்தநிலையில் ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்ட காலண்டர்கள் தற்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. மேலும் அரசியல்வாதிகள் பலர் தற்போது புதிய ஆர்டர்கள் கொடுத்து வருகிறார்கள். தற்போது பெறப்பட்டு வரும் ஆர்டருக்கு உரிய காலண்டர்கள் வருகிற 15-ந் தேதிக்குள் வினியோகம் செய்ய சிவகாசி அச்சகங்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை இரவு, பகலாக செய்து வருகின்றன.
இதனால் இந்த ஆண்டு சுமார் ரூ.400 கோடி மதிப்பிலான காலண்டர்கள் சிவகாசியில் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அச்சக அதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.