கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 40 பஸ்கள் இயக்கம்
ஆயுதபூஜை விடுமுறையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுதபூஜை விடுமுறையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுதபூஜை விடுமுறை
தொழில் நகரமான கோவையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஆயுதபூஜையையொட்டி வருகிற 4 மற்றும் 5-ந் தேதி அரசு விடுமுறை ஆகும். மேலும் பள்ளி மாணவ- மாணவிக ளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது.
இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் இருந்து கோவை யில் தங்கி இருக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள்.
இருக்கைகள் முன்பதிவு
இந்த நிலையில் கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் 3 மடங்கு உயர்ந்து உள்ளது. பல பஸ்களில் டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.
அதுபோன்று வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதனால் பெரும்பாலான பஸ்களில் இருக்கை இல்லாத நிலை உள்ளது.
எனவே பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கோவையில் இருந்து சென்னை, மதுரை, தேனி, நெல்லை, நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
கூடுதலாக 40 பஸ்கள்
ஆயுதபூஜை விடுமுறையையொட்டி கோவையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) வரை சென்னை, நெல்லை, நாகர்கோவில், மதுரை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 40 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதுபோல் சென்னையில் இருந்து கோவைக்கு கூடுதலாக 6 பஸ்கள் இயக்கப்படுகிறது.
பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
விடுமுறை முடிந்து கோவைக்கு திரும்பி வருவதற்கு வசதியாக 4-ந் தேதி நெல்லை, நாகர்கோவில், மதுரை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.