4 சுற்று பஸ்கள் இயக்கம்
ஊட்டியில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல 4 சுற்று பஸ்கள் இயக்கம் தொடங்கியது.;
ஊட்டி,
ஊட்டியில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் கோடை விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோடை சீசனையொட்டி போக்குவரத்துக்கழகம் சார்பில், சுற்றுலா பயணிகளுக்காக சுற்று பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம். இந்த பஸ்களில் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
குறிப்பாக பயணிகளுக்கு டிக்கெட்டிற்கு பதிலாக பாஸ் வழங்கப்படுகிறது. ½ மணி நேரத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் சுற்று பஸ்சில் பாஸ் வாங்கியவர்கள் குறிப்பிட்ட சுற்றுலா தலங்களில் ஏறி, இறங்கலாம். தற்போது 4 பஸ்கள் இயக்கப்படுகிறது. கோடை சீசன் முடியும் வரை இயக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்பட கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.