கன்னியாகுமரியில் வியாபாரி வீட்டில் 4 பவுன் நகை, பணம் கொள்ளை

கன்னியாகுமரியில் வியாபாரி வீட்டில் கதவை உடைத்து 4 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2023-07-21 19:15 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் வியாபாரி வீட்டில் கதவை உடைத்து 4 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

வியாபாரி வீடு

கன்னியாகுமரி மகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 55). வியாபாரியான இவர் கன்னியாகுமரியில் அலங்கார பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தங்கம். இவர்களுடைய மகன் சுந்தர். அசாம் மாநிலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

அதே சமயத்தில் சுந்தரின் மனைவி ஸ்ரீஜா கன்னியாகுமரியில் உள்ள வீட்டில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கோபி தன்னுடைய மனைவி தங்கம் மற்றும் உறவினர்களுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதி, காளஹஸ்தி போன்ற ஆன்மிக தலங்களுக்கு சாமி கும்பிட சென்றார். மேலும் மருமகள் ஸ்ரீஜா தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றார்.

4 பவுன் நகை கொள்ளை

இதற்கிடையே நேற்று கோபியின் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு கொடுக்க உறவினர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் ஆன்மிக தலங்களுக்கு சென்ற கோபி மற்றும் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

உடனே கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டுக்குள் நுழைந்தனர்.

அங்குள்ள அறையில் ஆங்காங்கே துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.49 ஆயிரத்து 500 ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கோபி வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு நள்ளிரவில் மர்மஆசாமிகள் அந்த வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

ஆசாமிகள் கைவரிசை

மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் கொள்ளையர்கள் உருவம் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர்.

வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

---

Tags:    

மேலும் செய்திகள்