தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனா்.;
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று மதியம் மதுரப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புதுச்சேரி மாநிலம் கலிதீர்த்தான்குப்பத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கார்த்தி(வயது 22), ஜெயமூர்த்தி மகன் ஜெயகுரு(25), மதகடிப்பட்டை சேர்ந்த பழனிசாமி மகன் யோகராஜ்(20), பி.எஸ்.பாளையம் தோப்பூரை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் வசந்தகுமார்(20) ஆகியோர் என்பதும், இவர்கள் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி மாநில எல்லை பகுதியில் சாலைகளில் மோட்டார் சைக்கிள்களில் சென்று தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் இவர்கள் இரவு நேரங்களில் சாலைகளில் தனியாக செல்பவா்களை தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன்களை வழிப்பறி செய்பவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 4 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.