ரேஷன் அரிசியை கடத்திய 4 பேர் கைது
திருப்பூரில் சரக்கு ஆட்டோவில் 2 ஆயிரத்து 475 கிலோ ரேஷன் அரிசியை கடத்திய 4 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.;
ரேஷன் அரிசி பறிமுதல்
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமனி உத்தரவின் பேரில், கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில், திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கார்த்தி மற்றும் சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேற்று திருப்பூர் அவினாசி ரோடு குமார் நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவுக்குள் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. 55 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 475 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ஆட்டோவில் வந்த 2 பேர் மற்றும் போலீசார் யாரும் இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க ஆட்டோவுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
4 பேர் கைது
இதில் அவர்கள் திருப்பூர் குமார் நகரை சேர்ந்த உதயகுமார் (வயது 28), கோவிந்தராஜ் (30), நல்லசிவம் (29) என்பது தெரியவந்தது. இவர்கள் சாமுண்டிபுரம், 15 வேலம்பாளையம், குமார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்தவிலைக்கு வாங்கி, ஆட்டோவில் ஏற்றி கவுண்டம்பாளையம் அருகே நாமக்கல்லை சேர்ந்த ஜீவா என்பவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் 2 ஆயிரத்து 475 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஜீவானந்தம் (28) என்பவரை மொரட்டுப்பாளையத்தில் போலீசார் கைது செய்தனர்.