பல்லடத்தில் 4 பேர் படுகொலை: குற்றவாளியை சுட்டுப்பிடித்த பெண் போலீஸ் அதிகாரி

பல்லடம் அருகே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபர் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றார். அவரை பெண் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார். குண்டு காயங்களுடன் சிக்கிய அந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Update: 2023-09-08 00:14 GMT

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 49). கடந்த 3-ந்தேதி இவருடைய வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையில் அமர்ந்து வெங்கடேஷ், செல்லமுத்து (24), விஷால் என்கிற சோனை முத்தையா (20) ஆகிய 3 பேர் மது குடித்தனர்.

இதை தட்டிக்கேட்ட மோகன்ராஜ், அவருடைய தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோரை வெங்கடேஷ், செல்லமுத்து, சோனை முத்தையா ஆகிய 3 பேரும் சேர்ந்து வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

கொலை செய்யப்பட்ட மோகன்ராஜிடம் வெங்கடேஷ் டிரைவராக வேலை பார்த்து வந்ததும், வெங்கடேஷின் நடவடிக்கைகள் சரியில்லாததால் மோகன்ராஜ் அவரை வேலை விட்டு நீக்கியதும் படுகொலைக்கான ஒரு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்குள் கொடுக்கல்- வாங்கலில் முன் விரோதம் இருந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கொலையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் முதலில் செல்லமுத்துவை கைது செய்தனர். அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

போலீசில் சரண்

இதற்கிடையில் தனிப்படை போலீசார் தேடுவதை அறிந்த வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையா ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மாவட்ட காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீசார் அவர்களை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அப்போது கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி பகுதியில் உள்ள முட்புதர்களில் மறைத்து வைத்திருப்பதாக வெங்கடேஷ் தெரிவித்தார்.

இதையடுத்து ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக நேற்று அதிகாலை 4.45 மணியளவில் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா மற்றும் போலீசார் வெங்கடேஷை ஒரு வேனில் பலத்த பாதுகாப்புடன் தொட்டம்பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

துப்பாக்கி சூடு

அங்கு சென்றதும் முட்புதர்களில் பதுக்கி வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை அவர் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார். பின்னர் அவரை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வேனில் கொண்டு சென்றனர். தொட்டம்பட்டி காட்டுப்பகுதியில் செல்லும்போது இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று வெங்கடேஷ் தெரிவித்தார். இதனால் போலீசார் வேனை நிறுத்தினர். பின்னர் வெங்கடேஷின் பாதுகாப்புக்காக 2 போலீசார் கூடவே சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வெங்கடேஷ் திடீரென போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பிச்சென்றான். இதனை கண்டதும் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா "ஓடாதே சுட்டு விடுவேன்" என துப்பாக்கியை எடுத்து எச்சரித்துள்ளார்.

அதனை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து ஓடியதால் துப்பாக்கியால் வெங்கடேஷை நோக்கி சுட்டார். இதில் அவரது ஒரு காலில் குண்டு பாய்ந்ததில் தவறி விழுந்தார். இருப்பினும் மீண்டும் ஒரு காலுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அவரை பிடிக்க முயன்ற போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசி தாக்கினார். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா பாதுகாப்புக்காக வெங்கடேஷ் மீது மற்றொரு ரவுண்டு சுட்டார். இதில் அவனின் மற்றொரு காலில் குண்டு பாய்ந்தது. 2 கால்களிலும் படுகாயம் ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்த வெங்கடேஷை போலீசார் மீட்டு, பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிகிச்சை

அங்கு வெங்கடேசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வெங்கடேஷ் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார். பல்லடத்தில் அதிகாலையில் குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட வெங்கடேசின் தந்தை அய்யப்பன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

கொலையாளி, தந்தை மீது 17 வழக்குகள்

போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் மீது நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. முக்கூடல் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, கூட்டுக் கொலை முயற்சி, ஆயுதங்களால் மிரட்டல் என 3 வழக்குகளும், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, ஆயுதங்களால் மிரட்டுதல் உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளன. அவரது தந்தை அய்யப்பன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்