பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிய தம்பதி உள்பட 4 பேர் பலி

ராமநாதபுரம் அருகே ஆட்டோவில் சென்றபோது கார் மோதிய விபத்தில் பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிய தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-02-19 18:45 GMT

பனைக்குளம், 

ராமநாதபுரம் அருகே ஆட்டோவில் சென்றபோது கார் மோதிய விபத்தில் பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிய தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஆண் குழந்தை பிறந்தது

ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சின்ன அடைக்கான்(வயது 28). டீக்கடையில் தொழிலாளியாக ேவலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சுமதி(25).

இந்தநிலையில் சுமதி கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து அவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 17-ந்தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து நேற்று மாலை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து சுமதி, குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சின்ன அடைக்கான், தனது மனைவி சுமதி, பிறந்த குழந்தை, உறவினரான சிங்கிவலைக்குப்பம் பகுதியை சேர்ந்த சேதுராஜாவின் மனைவி காளியம்மாள்(50) ஆகியோருடன் ஒரு ஆட்டோவில் ராமநாதபுரத்தில் இருந்து வேதாளைக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆட்டோ-கார் மோதல்

ஆட்டோவை ராமநாதபுரம், வித்தானூரை சேர்ந்த மலைராஜ்(50) ஓட்டினார். ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது.

அப்போது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரத்தை நோக்கி வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஆட்ேடா மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்து ஏற்படுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நின்றது. விபத்து நடந்ததை அறிந்ததும் காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

4 பேர் பலி

இதற்கிடையே கார் மோதியதில், ஆட்டோவில் வந்த சின்னஅடைக்கான், அவருடைய மனைவி சுமதி, பிறந்த ஆண் குழந்தை, ஆட்டோ டிரைவர் மலைராஜ் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய காளியம்மாளை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், அக்கம், பக்கத்தினர் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கார் டிரைவர் கைது

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் விக்னேசை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து பற்றி அறிந்ததும் அந்த பகுதி கிராம மக்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்தில் இறந்த சின்ன அடைக்கானின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகும்.

குழந்தை பிறந்த 3-வது நாளில் அந்த குழந்தையுடன் தம்பதி விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்