அம்பத்தூர் பிரியாணி கடையில் தகராறு என்ஜினீயர் கொலை வழக்கில் 4 பேர் கைது
அம்பத்தூர் பிரியாணி கடையில் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
அம்பத்தூர்,
கொரட்டூர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 20-ந் தேதியன்று இரவு அம்பத்தூர் மண்ணூர்பேட்டை அருகே உள்ள பிரியாணி கடையில் சாப்பிட சென்றபோது, கடைக்கு பிரியாணி வாங்க வந்த கும்பல் மீது பாலச்சந்திரன் தெரியாமல் இடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கையில் வைத்திருந்த கத்தியால் பாலச்சந்திரனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றது.
இதில் பாலச்சந்திரன் உயிரிழந்தார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலையில் வாலிபர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
இது குறித்த புகாரின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்திரனை கொலை செய்த முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சங்கர் (27), வெங்கடேஷ் (27), பெரம்பூரை சேர்ந்த அஜித் (24) மற்றும் அம்பத்துரைச் சேர்ந்த நெப்போலியன் (28) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.