தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் கைது
பட்டாரி வாலிபர் தூக்குப்போட்டு பரிதாபமாக இறந்தார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த தகரை வடக்கு காட்டு கொட்டாயை சேர்ந்தவர் தினேஷ்(வயது 22). பி.காம்.படித்துள்ளார். இவருக்கும் இதே கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் யுவராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று யுவராஜ் அதே கிராமத்தை சேர்ந்த கொடுவாகுமார், முருகேசன், செல்லதுரை, கந்தசாமி, சேது, அண்ணாமலை ஆகிய அனைவரும் சேர்ந்து தினேசை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தினேசை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி யுவராஜ் உள்பட 7 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நேற்று யுவராஜ் (28) கொடுவாகுமார் என்கிற செந்தில்குமார் (42), கந்தசாமி என்கிற தவக்களை (40), செல்லதுரை (50) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.