பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார்..!

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.;

Update:2023-03-21 08:54 IST

குமரி,

பாதிாியாரின் ஆபாச வீடியோ

குமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29), பாதிரியார். இவர் குமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் சில இளம்பெண்களுடன் இவர் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தல், வாட்ஸ் அப் வீடியோ காலில் பாதிரியார் நிர்வாணமாக பேசுதல், ஆபாச சாட்டிங், இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் என பரவி முகம் சுளிக்கும் வகையில் இருந்தது.

இந்த பாதிரியார் ஆலய பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். அங்கும் ஆலயங்களுக்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டியதாக தெரிகிறது.

நர்சிங் மாணவி புகார்

இதற்கிடையே பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தன்னை பாலியல் ரீதியாக சமூக வலைத்தளம் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பது, மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தலைமறைவு

இந்த விவகாரம் விஸ்வரூபமானதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ போலீசுக்கு பயந்து தலைமறைவானார். எனவே அவரை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவின்படி 2 தனிப்படை அமைக்கப்பட்டு தமிழகம், பெங்களூரு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் தேடினர்.

இந்தநிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடினர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பினார். இதனை தொடா்ந்து அவர் கேரளாவுக்கு சென்று தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.

கைது

போலீசாரிடம் சிக்கி விடாமல் இருக்க தன்னுடைய இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இறுதியில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு  ரகசிய தகவல் வந்தது. உடனே நள்ளிரவில் அங்கு விரைந்த போலீசார் பெனடிக்ட் ஆன்றோவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் 4 பெண்கள் புகார்

இதற்கிடையே பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் மிரட்டப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம், அவர்களுடைய பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்