கிண்டியில் மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

கிண்டியில் மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைதானார்கள். முடிந்தால் தீர்த்து கட்டிப்பார் என சவால் விட்டதால் கொன்றது தெரிந்தது.;

Update: 2023-07-02 05:05 GMT

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் வெறி தினேஷ் (வயது 25). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கிண்டி வண்டிக்காரன் தெருவில் சென்ற தினேசை 6 பேர் கொண்ட கொலை வெறி கும்பல் கையில் பட்டாக்கத்தியுடன் விரட்டி வந்தனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க, அங்குள்ள மளிகை கடைக்குள் தினேஷ் புகுந்தார். ஆனாலும் 6 பேரில் 2 பேர் மளிகை கடைக்குள் புகுந்து தினேசை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். கடைக்குள்ளேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

கொலையாளிகள் கடைக்குள் புகுந்து வெட்டியபோது வெளிப்புறமாக கடையின் ஷட்டரை பூட்டியதால் இருவரும் கடைக்குள்ளேயே மாட்டிக்கொண்டனர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கிண்டி போலீசார் கொலையான தினேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடைக்குள் பதுங்கி இருந்த மணிகண்டன்(28), உதய் (26) இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் ஆதம்பாக்கத்தில் பெரிய ரவுடியாக ராபின் என்பவர் வலம் வந்தார். ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராபினுக்கும், அவரது கூட்டாளியான குணாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து உள்ளனர்.

இந்தநிலையில் ராபின் சிறையில் உள்ளதால் ஆதம்பாக்கம் தாதாவாக வலம் வர குணா விரும்பியதாக கூறப்படுகிறது. இது பற்றி தனது நண்பரான காமேஷ் என்பவரிடம் கூறினார். அவர் இதுபற்றி, ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிசி மணிகண்டன், பள்ளிக்கரணையை சேர்ந்த ஊசி உதய் ஆகியோரிடம் கூறினார்.

உடனே உதய், குணாவை செல்போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி தட்டிக்கேட்டார். அதற்கு குணா, "ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட வா. அடுத்த 3 மணி நேரத்தில் உன்னை கொலை செய்கிறேன்" என்று கூறி விட்டு தனது நண்பரான ஆட்டோ டிரைவர் வெறி தினேஷிடம் தான் இருக்கும் இடத்தை செல்போனில் அவர்களுக்கு அனுப்பி வைக்கும்படி கூறினார்.

அதன்படி வெறி தினேஷ், தாங்கள் இருக்கும் இடத்தை செல்போனில் அனுப்பி வைத்ததுடன், "முடிந்தால் எங்களை கொலை செய்து பாருங்கள்" என சவால் விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சிசி மணிவண்ணன், ஊசி உதய் இருவரும் தங்கள் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து 6 பேரும் வேளச்சேரியில் இருந்து ஆட்டோவில் இருந்த வெறி தினேசை விரட்டி வந்தனர். கிண்டி வண்டிக்காரன் தெருவுக்கு ஓடிவந்த தினேஷ், அங்குள்ள மளிகை கடைக்குள் கூட்டமாக இருப்பதை பார்த்ததும் உயிர் தப்பிக்க கடைக்குள் புகுந்தார். ஆனாலும் கொலையாளிகள் உள்ளே புகுந்து அவரை வெட்டிக்கொன்றதும், கடையின் ஷட்டரை பூட்டியதால் 2 பேரும் சிக்கியதும், அங்கு கூட்டம் கூடியதால் கூட்டாளிகள் தப்பிச்சென்றதும் தெரியவந்தது.

மேலும் கைதான மணிகண்டன், உதய் இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்த 5 மணி நேரத்தில் ஆட்டோ டிரைவரை கொலை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

யார் பெரிய ரவுடி?. முடிந்தால் கொலை செய்து பார்? என சவால் விட்ட 1 மணி நேரத்தில் ரவுடி குணாவின் கூட்டாளியான ஆட்டோ டிரைவர் தினேஷ் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது.

இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில் பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்த காமேஷ் (25), ஈஸ்வரன் (27), வசந்த் (29), தினேஷ் (27) ஆகிய மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்